புதன், 20 பிப்ரவரி, 2013

அக்கரை


விண்ணைக் காணும்
கண்களுக்கு – அதன்
தொலைவு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. . .

மண்ணைக் காசாக்கும்
இதயங்களுக்கு – இயற்கையின்
தன்மை பற்றிய
கவலையில்லை. . .

வறுமையைக் காணும்
அரசுகளுக்கு – அதன்
வளமையைப் பெருக்க
நினைவில்லை. . .

செழுமைகளை(யே) நோக்கும்
மனங்களுக்கு – சமூக
கொடுமைகளைப் போக்கும்
சிந்தனையில்லை. . .

சிந்தனையாளர்கள் பலரின்
கருத்துக்கள் - சிலரின்
சிரசுக்குள்க் கூட
செல்வதில்லை. . .

சிரசுக்குள் செல்லவேண்டிய
சில கருத்துக்கள் - நம்
சிந்தனையோடு
சிறிது கலந்துவிட்டால். . .

சீர்ப்பட்ட சமூகத்தின் “ அக்கரை
சேரும் தூரம் - நம்
கண்களுக்கு வெகு
தொலைவிலில்லை. . .